மூளையிலும் தண்டுவடத்திலும் ஏற்படும் புற்று நோய் கட்டிகளை கண்டறிவதை மேம்படுத்தும் புதிய கருவியை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஜிபிஎம் டிரைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இது இயந்திரக் கற்றலை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டுக் கருவியாகும். வேகமாக வளரும் கிளையோபிளாஸ்டோமா எனப்படும் புற்றுநோயில் ஏற்படும் மரபணு பிறழ்வுகளை அடையாளம் காண்பதற்காக இது பிரதானமாக உருவாக்கப்பட்டுள்ளது. 81.99% சரியாக கண்டுபிடிப்பதால் தற்போது உள்ள முறையைவிட இது மேம்பட்டது. இது கட்டுப்பாடுகளின்றி யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தும் மென்பொருள் ஆகும். முற்றிலும் புரதங்களின் தொடர்ச்சியின் அடிப்படையில் இது இயங்குகிறது. புற்றுநோயை உண்டாக்கும் பிறழ்வுகளின் பிரதான அமினோ அமில குணாம்சங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. கடந்த காலத்தில் கிளையோபிளாஸ்டோமா கட்டிகள் குறித்த ஆய்வுகள் ஆழ்ந்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் குறைவான சிகிச்சை முறைகளே உள்ளன. கண்டறியப்பட்டபின் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே பிழைத்திருக்கின்றனர். சிகிச்சைக்கான இலக்கை கண்டறியவும் கிளையோபிளாஸ்டோமா பிறழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் இந்த முறை உதவும் என தான் எதிர்பார்ப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் மேத்தா பாண்டே கூறுகிறார். ஜிபிஎம் டிரைவர் உருவாக்கப்பட்டதினால் இந்த நோய்க்கு புதுமையான சிகிச்சை இலக்குகளை கண்டறியும் வாய்ப்பு உள்ளது. மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குணமடைவதும் மேம்படும்.